30/6/13

ஈரோடு, சாக்கடையாக மாறும் காலிங்கராயன் வாய்க்கால்.

ஈரோடு,

காலிங்கராயன் வாய்க்காலில் பாய்ந்து வரும் சாயக்கழிவை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சாக்கடையாக மாறும் வாய்க்கால்
 ஈரோடு முதல் கொடுமுடி வரை பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து வரும் பழமையான காலிங்கராயன் வாய்க்கால் சுமார் 750 ஆண்டுகளாக இந்த பகுதி விவசாயிகளின் ஒரே ஜீவாதாரமாக உள்ளது.
ஆனால் ஈரோட்டில் இயங்கி
வரும் பல சாயப்பட்டறை மற்றும் தோல் தொழிற்சாலை அதிபர்கள் காலிங்கராயன் வாய்க்காலை தங்கள் தொழிற்சாலைகளின் கழிவுகளை கொட்டும் சாக்கடையாக மாற்றி வைத்து உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக காலிங்கராயன் வாய்க்காலில் கொட்டப்பட்ட கழிவுகளால் காலிங்கராயன் பாசன நிலங்கள் உயிரிழந்து போய்விட்டன. எனவே காலிங்கராயன் வாய்க்காலை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
துணைக்கால்வாய்
இதன்விளைவாக, காலிங்கராயன் வாய்க்காலில் சாய மற்றும் தோல் கழிவுகள் பாசன தண்ணீரில் கலக்காத வகையில் துணைக்கால்வாய் கட்ட தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணிக்காக காலிங்கராயன் வாய்க்காலில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே தண்ணீர் நிறுத்தப்பட்டது.
அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டாலும், கோடை வெயிலில் பாசன நிலங்கள் அனைத்தும் காய்ந்தாலும், ஈரோட்டில் உள்ள சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளின் உபயத்தால் காலிங்கராயன் வாய்க்கால் மட்டும் எப்போதும் வற்றுவதே இல்லை. சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள் குழாய்கள் மூலம் நேரடியாக வாய்க்காலுக்குள் விடப்படுகின்றன. ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு வண்ணத்துடன் காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் ஓடுகிறது. அதுமட்டுமின்றி வாய்க்கால் ஓரமாகக்கூட நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
இங்கும் ஒருசாக்கடை.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் கருங்கல்பாளையம் கே..எஸ். நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி உற்பத்தி ஆலையில் இருந்து சாயக்கழிவுகள் குழாய் மூலம் காலிங்கராயன் வாய்க்காலுக்கு விடப்படுவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து ஈரோடு தாசில்தார் சுசீலா, மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று காலிங்கராயன் வாய்க்காலில் ஆய்வு செய்தனர்.
அப்போது குறிப்பிட்ட பகுதியில் சாயக்கழிவு நீர் குட்டைபோல தேங்கி, வாய்க்காலில் பாய்ந்து கொண்டிருந்தது. அந்த பகுதிக்கு செல்ல முடியாத அளவு துர்நாற்றம் வீசியது. அதனை பார்வையிட்ட அதிகாரிகள், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
கோரிக்கை
அதிகாரிகள் கூறும்போது, காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு கலப்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்படும். பின்னர் உரிய விசாரணை நடத்தப்பட்டு, நிறுவனங்களின் தவறு உறுதி செய்யப்பட்டால் உரிய தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. மழை பெய்யாமல் வறட்சி நிலவுகிறது. எனவே சாயக்கழிவு நீர் வாய்க்காலில் விடுவது கண்கூடாக தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நன்றி : dailythanthi.com/node/350464[ Jun 30],  & kandhpraba.blogspot.in 
prabanchan303.blogspot.in


கருத்துகள் இல்லை: